How to Become an IAS Officer ? What is UPSC in Tamil

Become an IAS Officer in Tamil : Here is the Answer to how to become an IAS Officer in Tamil.

ஐஏஎஸ் ஆவது எப்படி? எப்படி தயாராக வேண்டும்? என்ன தகுதி தேவை?

ஐஏஎஸ் இந்தியாவில் பல லட்சம் இளைஞர்களை சிறுவயதில் இருந்தே ஆட்கொள்ளும் பெருங்கனவு இது. ஐஏஎஸ் அதிகாரியாகி சேவை செய்வேன் என்று பள்ளித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள், சூளுரைப்பதைப் பார்த்திருப்போம். இந்திய அரசையும், மாநில அரசுகளையும் ஆட்டுவிக்கும் அதிகாரம் மிக்கப் பதவிகள் எல்லாம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளால் நிரம்பியவை. காலனியாதிக்கக் காலத்தில் பெருமையும், அதிகாரமும் மிகுந்ததாக இருந்த ஐசிஎஸ் (இந்தியன் சிவில் சர்வீஸ்) தேர்வின் அடியொற்றி, சுதந்திர இந்தியாவில் வந்த தேர்வு இது. இதுவும், ஐஏஎஸ் தேர்வு மீது ஏற்பட்ட ஈர்ப்புக்கு ஒரு காரணம்.

ஆண்டுதோறும் சில நூறு பேர்களே ஐஏஎஸ் பணிக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்றபோதும், இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 10 லட்சம் பேர் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கிறார்கள். இவர்களில் சுமார் சரிபாதி பேர்தான் முதல் நிலைத் தேர்வான பிரில்லிமினரி தேர்வையே எழுதச் செல்கிறார்கள், என்பது இந்த தேர்வை கூர்ந்து கவனிப்பவர்கள் கூறும் கணக்கு.

How to Become as IAS Officer in Just a Year ?

பல லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கும் ஐ.ஏ.எஸ். தேர்வுப் பயிற்சி நிறுவனங்கள் இருந்தபோதும், மூலை முடுக்குகளில் இருந்தும், எளிய குடும்பப் பின்னணியில் இருந்தும் இந்தத் தேர்வில் வெற்றி பெற்று அதிகாரத்தின் உச்ச பீடங்களில் கால் பதிப்பவர்கள் குறித்த கதைகள் ஆண்டுதோறும் வந்துகொண்டிருக்கின்றன. இந்தியாவின் முன்னணி மேலாண்மை நிறுவனங்களான ஐ.ஐ.எம்., தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான ஐஐடி போன்றவற்றில் கல்வி பயின்று வெளியே வருகிறவர்கள் மத்தியில் இத்தகைய நெகிழ்ச்சிக் கதைகள் ஒப்பீட்டளவில் குறைவு.

எனவே, சமூகத்தின் எந்த நிலையில் இருப்பவரும் கனவு காணக்கூடியதாக மட்டுமல்ல, எல்லா சமூகப் பின்னணியில் இருந்தும் வெற்றி பெற முடிவதாகவும் இந்தத் தேர்வு உள்ளது என்பதுதான் இதன் சிறப்பு. இந்த தேர்வுக்கு எப்படி விண்ணப்பிக்கவேண்டும்? என்ன தகுதி தேவை? தேர்வுகளின் படிநிலையும், கட்டமைப்பும் என்ன? வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் என்ன? சவால்கள் என்ன? எதைப் படிக்கவேண்டும்? எப்படிப் படிக்கவேண்டும்? என்ற கேள்விகளுக்கான மிக அடிப்படையான விளக்கத்தைத் தருவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

How to Become an IAS Officer in Tamil ?

ஐஏஎஸ் ஆவது எப்படி? எப்படி தயாராக வேண்டும்? என்ன தகுதி தேவை?
  1. ஐஏஎஸ் தேர்வின் அடிப்படைத் தகவல்கள்

ஐஏஎஸ் (இந்தியன் அட்மினிஸ்ட்ரேட்டிவ் சர்வீஸ்) என்பதன் பொருள் ‘இந்திய ஆட்சிப் பணி’ என்பதாகும். சாமானியர்கள் பலரால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதுபோல ஐஏஎஸ் என்பது படிப்போ, பட்டமோ அல்ல. இது ஒரு பணி.

இந்திய அரசின் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தனது வருடாந்திர சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் இந்தப் பணிக்கான ஆட்களைத் தேர்வு செய்கிறது. சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டுமே தேர்வு செய்யப்படுவதில்லை. இந்தியக் காவல் பணியான ஐ.பி.எஸ்., இந்திய வருவாய்ப் பணியான ஐ.ஆர்.எஸ்., இந்திய அயலுறவுப் பணியான ஐ.எஃப்.எஸ். போன்ற சுமார் 20 மத்தியப் பணிகளுக்கான அதிகாரிகள் இந்த சிவில் சர்வீஸ் தேர்வின் மூலமே தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்திய சிவில் சர்வீசஸ் தேர்வு அடிப்படையில் இரண்டு கட்டங்களை உடையது.

முதல் கட்டம் – ப்ரில்லிமினரி தேர்வு என்று அழைக்கப்படும் முதல் நிலைத் தேர்வு.

இரண்டாவது கட்டத்தில், மெயின் என்று அழைக்கப்படும் முதன்மைத் தேர்வு, நேர்க்காணல் ஆகியவை உள்ளன.

  1. ஐஏஎஸ் தேர்வின் தகுதிகள், வாய்ப்புகள்

வயது: 21 வயது நிறைவு அடைந்தவர்கள் மட்டுமே இந்த தேர்வினை எழுதத் தகுதி படைத்தவர்கள். பொதுப் பிரிவு எனில் அவர்கள் 32 வயது வரை இந்த தேர்வை எழுதலாம். பட்டியலினம், பட்டியல் பழங்குடிகளை சேர்ந்தோருக்கு அதிகபட்ச வயது வரம்பில் 5 ஆண்டுகள் வரையிலும், பிற்படுத்தப்பட்டோர் எனில் 3 ஆண்டுகள் வரையிலும் தளர்வு உண்டு.

முயற்சிகள்: வயது வரம்பு அனுமதித்தாலும், எல்லாப் பிரிவினரும் எண்ணற்ற முறை இந்த தேர்வினை எழுத முடியாது. பொதுப் பிரிவினர் எனில் மொத்தம் 6 முறை இந்தத் தேர்வினை எழுதலாம். அதற்கு மேல் எழுத முடியாது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் குறிப்பிட்ட வகையிலான உடல் ஊனமுற்றோர் எனில் 9 முறை இந்த தேர்வினை எழுதலாம்.

கல்வி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழங்களில் குறைந்தபட்சம் இளநிலை பட்டப்படிப்பு முடித்தவர்களோ, அல்லது பட்டப்படிப்பின் இறுதியாண்டில் இருப்பவர்களோ இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத்திறனாளில் குறிப்பிட்ட திறன்களை வெளிப்படுத்த முடிகிறவர்கள் மட்டுமே இந்த தேர்வுக்கு தகுதி உடையவர்கள்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ். உள்ளிட்ட மத்தியப் பணிகளில் சேர விரும்புவோர் முதலில் எழுத வேண்டிய தேர்வு, முதலில் காலடி வைக்கவேண்டிய நுழைவு வாயில், பிரில்லிமினரி தேர்வுதான்.

3. ஐஏஎஸ் ப்ரில்லிமினரி தேர்வு என்றால் என்ன ?

ப்ரில்லிமினரி தேர்வு எனப்படும் முதல் நிலைத் தேர்வில் இரண்டு தாள்கள் உண்டு. ஒவ்வொன்றிலும் தலா 200 மதிப்பெண்களுக்கான கேள்விகள் இருக்கும். முதல் தாள் ஜெனரல் ஸ்டடிஸ் எனப்படும் பொது அறிவுத் தாள்.

இரண்டாவது தாள், சிசேட் (Civil Services Aptitude Test) எனப்படும் இயல்திறன் தேர்வு.

முதன்மைத் தேர்வான மெயின் தேர்வுக்கு தேர்ச்சி பெறுவதற்கு, பிரில்லிமினரி பொது அறிவுத் தாளில் கட் ஆப் மதிப்பெண்ணுக்கு மேலும், இரண்டாவது தாளான இயல்திறன் தேர்வில் குறைந்தபட்சம் 33 சதவீதம் மதிப்பெண்ணும் பெறவேண்டும். இந்த இயல்திறன் தேர்வு என்பது தகுதிகாண் தேர்வு மட்டுமே, இதில் கூடுதலாக மதிப்பெண் பெறுவது கட்டாயம் அல்ல.

முதன்மைத் தேர்வு முக்கியமானது, விரிவானது என்றபோதும், முதல் நிலைத் தேர்வான பிரில்லிமினரி தேர்வில் தேர்ச்சி பெறுவது மிகவும் சிக்கலானது என்கிறார்கள் வல்லுநர்கள்.

இது ஆப்ஷனல் அடிப்படையிலான தேர்வு என்பதால் தவறான விடைக்கு மைனஸ் மதிப்பெண் உண்டு. தவிர இந்த தேர்வில் நேர மேலாண்மை மிக முக்கியம்ப்ரில்லிமினரி பொது அறிவுத் தேர்வில் 50-60 சதவீத மதிப்பெண் பெற்றாலும்கூட முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்றுவிட முடியும் என்றாலும், அதற்கு தொடர் பயிற்சியும், நேர மேலாண்மையும் மிக முக்கியம்

உறுதியாகத் தெரிந்த 100 கேள்விகளுக்காவது விடை அளிக்க முடியவேண்டும் . கடந்த சில ஆண்டுகளில் என்னவிதமான கேள்விகள் கேட்கப்படுகின்றன என்பதை கூர்ந்து பார்த்து பொதுவான போக்கு என்ன என்பதை கணித்துக் கொள்வது நல்ல உத்தி
சமீப ஆண்டுகளில் பொருளியல் தொடர்பான கேள்விகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன

ஒவ்வோர் ஆண்டும் மே-ஜுன் மாதங்களில் முதல் நிலைத் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாகும். யுபிஎஸ்சி இணைய தளத்தின் மூலம் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கவேண்டும்.

  1. ஐஏஎஸ் மெயின் தேர்வு என்றால் என்ன ?

மெயின் தேர்வு என்பது, எழுத்துத் தேர்வு, நேர்க்காணல் என்று இரண்டு பாகங்களை உடையது.

பிரில்லிமினரி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின் எழுத்துத் தேர்வு எழுதத் தகுதியுடையவர்கள். மெயின் எழுத்துத் தேர்வில் 9 தாள்கள் (தேர்வுகள்) உண்டு. இவற்றில் நான்கு தாள்கள் பொது அறிவுத் தாள்கள், இரண்டு விருப்பப் பாடத் தாள்கள், ஒரு கட்டுரைத் தாள், இரண்டு மொழித் தாள்கள். விருப்பப்பாடத் தாள்கள் இரண்டுக்குமான பாடம் எது என்பதை தேர்வர்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.

அதைப் போல மொழிப்பாடத் தாள்கள் இரண்டில் ஒன்று ஆங்கிலம். மற்றொன்று இந்திய மொழி. இந்த இந்திய மொழித் தாளுக்கு இந்தியாவின் 8வது அட்டவணையில் இடம் பெற்ற மொழிகளில் ஒன்றை தேர்வர்கள் தேர்வு செய்துகொள்ளலாம். இந்த அட்டவணையில் தமிழ் உண்டு. ஆனால் மொழித் தாள்கள் இரண்டிலும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணைப் பெற்றாலே போதுமானது. இந்த இரு தாள்களில் பெறும் மதிப்பெண்கள், இறுதித் தேர்ச்சிக்கு கணக்கில் கொள்ளப்படாது.

அதைப் போல இந்த மெயின் தேர்வின் பிற தாள்களுக்கான கேள்விகள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே கேட்கப்படும். ஆனால், 8-வது அட்டவணையில் உள்ள எந்த மொழியில் வேண்டுமானாலும் விடைகளை எழுதலாம். ஆனால், எல்லா தாள்களையும் ஒரே மொழியில்தான் எழுதவேண்டும். எனவே இந்தத் தேர்வினை தமிழில் எழுதலாம்.

  1. ஐஏஎஸ் தேர்வின் பாடங்கள்

மெயின் தேர்வின் நான்கு பொது அறிவுத் தாள்களுக்கு என்னென்ன பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்று பார்ப்போம்.

  • பொது அறிவு முதல் தாளில், இந்தியாவின் மரபு, பண்பாடு, வரலாறு மற்றும் உலகப் புவியியல், சமூகம் ஆகியவை பற்றிய கேள்விகள் இடம் பெறும்.
  • பொது அறிவு இரண்டாம் தாளில், ஆட்சி, அரசமைப்புச் சட்டம், சமூக நல நடவடிக்கைகள், சமூக நீதி, சர்வதேச உறவுகள் ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
  • பொது அறிவு மூன்றாம் தாளில் தொழில்நுட்பம், பொருளியல் வளர்ச்சி, வேளாண்மை, பல்லுயிர்ப் பெருக்கம், பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை ஆகிய துறை சார்ந்த கேள்விகள் கேட்கப்படும்.
  • பொது அறிவு நான்காம் தாளில் அறவியல், நம்பகத் தன்மை, இயல்திறன் எனப்படும் ஆப்டிடியூட் சார்ந்த கேள்விகள் கேட்கப்படும்.
  • கட்டுரைத் தாளில் சில தலைப்புகளைத் தருவார்கள். அதில் ஒன்றின் கீழ் கட்டுரை எழுத வேண்டும். இதற்கு 100 மதிப்பெண்கள். இது தவிர துல்லியமாக எழுதுவது, ஆங்கிலத்தில் இருந்து நீங்கள் தேர்வு செய்யும் ஒரு மொழிக்கும், தேர்ந்தெடுத்த மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்ப்பு செய்வது, ஒரு பத்தியைப் படித்து அதில் இருந்து கேட்கப்படும் கேள்விக்கு பதில் சொல்வது ஆகியவையும் இந்தத் தாளில் இடம் பெறும்.
  1. ஐஏஎஸ் தேர்வுக்கு எப்படி தயாராக வேண்டும்?

இந்த தேர்வில் வெற்றி பெறுவதற்கு, வெறும் புத்தகத்தில் உள்ளதை மட்டுமே போதாது. தர்க்கபூர்வமான சிந்தனை வேண்டும். தாங்கள் தேர்ந்தெடுத்த பாடத்தை அலசி ஆராயும் திறனும், ஒவ்வொரு தகவலையும் மற்றவற்றோடு தொடர்பு படுத்தி விவாதிக்கும் திறனும் வேண்டும் ஆனால், இது மட்டுமே போதாது. இந்த தேர்வில் கட்டுரைகளை வள வள என்று பக்கம் பக்கமாக எழுத முடியாது. ஒவ்வொரு கேள்விக்கும் விடையளிக்க ஒரு கட்டம் ஒதுக்கப்பட்டிருக்கும் அதற்குள்ளேயே விடைகளை முடித்துவிடவேண்டும். எனவே,

  • அ. தெளிவான, நல்ல மொழி நடையில், எளிய சொற்களைக் கொண்டு எழுதுவது.
  • ஆ. முக்கியமான அம்சங்களை விடுபடாமல் சொல்லிவிடுவது.
  • இ. பிரச்னையை அலசி ஆராயும் திறனை வெளிப்படுத்துவது.
  • ஈ. அப்படி அலசி ஆராய்வதில் நேர்மறை அணுகுமுறையை கடைபிடிப்பது

ஆகியவை மிக முக்கியம். அத்துடன் இந்த தேர்வில் சாய்ஸ் இல்லை, எல்லா கேள்விகளுக்குமே விடையளிக்கவேண்டும்

பட்டப்படிப்பில் ஒருவர் தேர்வு செய்த பாடங்களைத்தான் விருப்பப்பாடங்களாகத் தேர்வு செய்யவேண்டும் என்பது இல்லை , மாணவர்களின் திறனையும், விருப்பத்தையும் பொருத்து பொது நிர்வாகம், அரசியல் அறிவியல், சமூகவியல், புவியியல், மானுடவியல், வேளாண்மை அறிவியல் போன்றவற்றை தேர்வு செய்வது எளிதாக இருக்கும். கணிதம், இயற்பியல் போன்ற பாடங்களில் அபரிமிதமான ஆற்றல் உள்ளவர்கள் மட்டுமே இத்தகைய பாடங்களை விருப்பப் பாடங்களாக தேர்வு செய்யவேண்டும்

  1. ஐஏஎஸ் தேர்வை தமிழில் எழுதலாமா?

பயிற்சி மையங்கள் நிச்சயமாக பயனுள்ளவையாக இருக்கும் , அதே நேரம் பயிற்சி மையங்களுக்கு செல்லாதவர்கள் தயாராவதற்கும் வழிகள் உண்டு பயிற்சி மையங்களுக்கு செல்லாதவர்கள் ஆன்லைனில் கிடைக்கும் தேர்வுகளை எழுதிப் பார்க்கலாம்.

கடந்த ஆண்டுகளின் கேள்விகள், தேர்வுக்கான பாடத் துணைவன்களை வெளியில் வாங்கிப் படிக்கலாம் விடாமுயற்சி, மிகுந்த கவனமாக பாடத்தில் நுட்பமான அறிவைப் பெறுவது ஆகிய இரண்டும் இருந்து வெளியில் கிடைக்கும் பாடத் துணை நூல்களை வாங்கிப் படிப்பவர்கள் வெற்றி பெற வாய்ப்பு உண்டு தமிழில் எழுதுவதால் தனியாக எந்த ஆதாயமும் இல்லை தமிழில் எழுதுவோருக்கு போதிய பாட மெட்டீரியல்கள் கிடைக்காத நிலை உள்ளது. தமிழில் மிகுந்த தன்னம்பிக்கை உள்ளவர்கள், தாமாகத் தயாரித்துக்கொண்டு, ஆங்கிலத்தில் படித்துவிட்டு தேர்வை தமிழில் எழுதலாம். ஆனால், இது மிகவும் கவனமாக எடுக்கப்படவேண்டிய முடிவு 

  1. ஐஏஎஸ் தேர்வின் நேர்காணல் எப்படி இருக்கும் ?

மெயின் தேர்வில் இரண்டு மொழித் தாள்கள் தவிர உள்ள 7 தாள்களும் மொத்தம் 1750 மதிப்பெண்களுக்கானவை. இவற்றில் மிக அதிகமான மதிப்பெண் பெற்ற குறிப்பிட்ட அளவு தேர்வர்கள் நேர்காணலுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்க்காணலுக்கு 275 மதிப்பெண்கள். நேர்க்காணல் முடித்த பிறகு, நேர்காணல் மற்றும் மெயின் தேர்வின் 7 தாள்களின் மதிப்பெண்கள் ஆகியவற்றைக் கூட்டிப் பார்த்து அதன் அடிப்படையிலேயே தேர்ச்சி நடைபெறும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் ரேங்க்கும் இந்தக் கூட்டு மதிப்பெண் அடிப்படையிலேயே அமையும்.

இந்த ரேங்க் அடிப்படையிலேயே, ஒரு தேர்வர் விரும்பும் பணி, அதாவது ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ். மற்றும் பிரிவு ஏ பணிகள், பிரிவு பி பணிகள் ஆகியவை முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும்.

அதாவது அதிக மதிப்பெண் பெற்றவர்கள் முதலில் தேவையான பணியை தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவர். எனவே, தேர்வில் வெற்றி பெற்றாலும், அதிக ரேங்க் பெற்றவர்களே ஐஏஎஸ் போன்ற முன்னுரிமைப் பணிகளைப் பெற முடியும்.

சுமார் 5 லடசம் பேர் பிரில்லிமினரி தேர்வை எழுதுகிறார்கள். இவர்களில் முதலில் வரும் சுமார் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர் மட்டுமே மெயின் தேர்வுக்கு தகுதி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்களில் சுமார் 2 ஆயிரம் பேர் மட்டுமே நேர்க்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இவர்களில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 1,000 பேர் பணிக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆனால், இந்த ஆயிரம் பேருமே ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆவதில்லை.

Here is the Answer for How to become an IAS Officer

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *